இலங்கையை மீண்டும் வளைத்துப்போட சீனா அதிரடி வியூகம்!
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமரானால் இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சீன அரசு தயாராக இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய மஹிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான நடவடிக்கைகள் மொட்டுக் கட்சியால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு மஹிந்த மீண்டும் பிரதமராகி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்ப்பாரானால் சர்வதேச நாணய நிதியத்தின் மிகுதி நிதி கிடைக்காமல் போய்விடும்.
அதை ஈடுசெய்வதற்காகவும் இலங்கையை மீண்டும் தனது பிடிக்குள் கொண்டு வருவதாகவுமே சீனா இவ்வாறான உதவித் திட்டத்தை அறிவிக்கவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரத்தில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதாரப் பிரச்சினையின் தொடக்கத்தில் சீனா இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கி உதவுவதற்கு முன்வந்தது. இந்தத் தகவலை மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியபோது கோட்டாபய அந்தக் கடனை மறுத்துவிட்டார்.
காரணம், கோட்டாபயவுக்குப் பொருளாதார ஆலோசனை வழங்கி வந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி அந்தக் கடன் உதவியைப் பெற வேண்டாம் என்றும், ஏற்கனவே பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத வங்குரோத்து அடைந்த நாடாக இலங்கையை அறிவித்து கடன் மீளச் செலுத்துவதை இடைநிறுத்துமாறும் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அப்படி அறிவித்தால் கடன் பெற முடியாது. இதைக் கப்ரால் எதிர்த்தார். ஆனால், கோட்டாபய அதே நிலைப்பாட்டில் நின்றார். அப்படியே அறிவிக்கவும் செய்தது நிதி அமைச்சு.
இதனால் சீனா வழங்கவிருந்த 4 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்காமல் போனது. அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் வேலைத்திட்டத்தையும் தொடக்கி வைத்தார் கோட்டாபய.
அப்போது கிடைக்காமல்போன 4 பில்லியன் அமெரிக்க டொலர் இப்போது 5 பில்லியன் அமெரிக்க டொலராகக் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.