சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு.

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது. இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.
அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 413 ஆக அதிகரித்துள்ளது. 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.