நுண் கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்.

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் நுண் கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (07) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யு.டி.லக்ஸ்மன் மற்றும் பிரதி மத்திய வங்கி ஆளுநர் கே.எம்.எம்.சிறிவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான டி. நாணயகார, ஆர்.கருணரத்ன மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்களால் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கொடுக்கல்-வாங்கல்களால் சமுதாயத்தில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் வங்கி கடனை கட்டமுடியாமல் கோவிட் 19 காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த மக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மத்திய வங்கி ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டோர் அதிகாரிகளின் கருத்துக்களையும் அதன் பின்னதாக மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
அத்துடன் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள் சிலவற்றுக்கு தடைவிதித்து இருப்பதாகவும் பணத்தைப் பெறுவதில் தொழில் முயற்சியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அவற்றின் காரணமாக கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு பணத்தை பெற்று அதனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் சரியான திட்டங்களை நடைமுறைப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படுகின்றன திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவற்றை செயற்படுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டுமென மக்கள் தமது கோரிக்கைகளை மத்திய வங்கி ஆளுநரிடம் முன்வைத்தனர்.
இதன் பின்னர் பகுதியாக மக்களின் கருத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமது குழுக்களுடன் ஆராய்ந்து இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் கொள்கை ரீதியான முடிவுகளை எட்ட முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.