உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை வேறு நீதிபதிகளுக்கு மறு பட்டியலிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா அலையின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 10,000 அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், ரவீந்திர பட், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் ஒருவராக நீதிபதி ரவீந்திர பட் உள்ளார். இந்த வழக்கும், கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளான மற்ற நீதிபதிகள் விசாரித்து வந்த வழக்குகளும், வேறு நீதிபதிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல், உடல்நிலை காரணமாக திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நீதிபதி சூர்யகாந்த் கொரோனா தொற்றில் இருந்து கடந்த வாரம் மீண்டுவந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.