சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் – சி.பி.எஸ்.இக்கு சு.வெங்கடேசன் கடிதம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் & உயிரியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் கடுமையாக இருந்தன.ஆகவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுத் தாள் திருத்தம் அமையவேண்டும். சலுகை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இப்படி குறிப்பிட்ட மாநில/ மண்டல மாணவர்களின் கேள்வித் தாள் கனத்தால் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று மார்ச் 20, 2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். பெற்றோர், மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களின் மன உளைச்சலை தெரிவித்த பின்னணியில் அக்கடிதம் எழுதப்பட்டது.
அதற்கு சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ் எழுதியுள்ள 25.03.2023 தேதியிட்ட பதில் (CBSE/CE/PPS/2023) வந்துள்ளது. அந்த பதிலில் “சிபிஎஸ்இ வசம் இது போன்ற மாணவர் குறைகளை தீர்க்க “செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு” (Robust internal system) இருக்கிறது. இது பாட நிபுணர்களின் ( Subject experts) கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடியது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் பொத்தாம் பொதுவாக உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினை இந்த “செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு” (Robust internal system) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? இதன் மீது “பாட நிபுணர்களின் ( Subject experts) கருத்துக்கள்” கோரப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் அந்த பதிலில் இல்லை. செயலூக்கம் உள்ள உள் கட்டமைப்பு” (Robust internal system) வெவ்வேறு பகுதிகளுக்கான கேள்வித் தாள் கவனத்தில் ஒரு சமத்துவத்தை பேணுவதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் இது குறிப்பிட்ட பகுதி மாணவர்களுக்கு இயற்கை நீதியை மறுப்பதாக ஆகிவிடும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெற்றோர், மாணவர்கள் தங்கள் குறைகளை கொண்டு வரும் போது குறிப்பான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆகவே நான் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்த குறிப்பான பதிலை எதிர்பார்க்கிறேன் என்று இன்று சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் டாக்டர் சன்யாம் பரத்வாஜ்ஜூக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன்.
பல பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றைத் தேர்வு என்று “நீட்”டைத் திணிக்கும் மத்திய அரசே, ஒரே பாடத் திட்டத்திற்கு பல கேள்வித்தாள் என்பது நகை முரண் அல்லவா. கொள்கை குழப்படி அல்லவா? பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீதி வழங்கு என வலியுறுத்தியுள்ளார்.