கொலைக்கு 1 லட்சம் கொடுத்த மனைவியும், காதலனும் கைது : கணவன் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
கணவனை கொலை செய்ய திட்டமிட்டு ஒரு லட்சம் ரூபா ஒப்பந்தம் செய்த கள்ள காதலன் மற்றும் மனைவி உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று (23) ஆனமடுவ பொலிஸாரால் கைதாகியுள்ளனர்.
கொலை செய்ய திட்டமிட்ட , ஆனமடுவ பாளியாகம நேபடவெவ பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரும், கணவனைக் கொலை செய்ய உதவிய மனைவியும், கணவனை கொல்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நீர்கொழும்பில் வசிக்கும் இரண்டு சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கால்நடை பண்ணை மற்றும் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவரின் மனைவியுடன், இரகசியமாக தொடர்பு வைத்திருந்த விவசாயியின் நெருங்கிய நண்பரே , இக்கொலையின் பின்னர் ஒன்றாக வாழ திட்டம் தீட்டியதாக அறியப்படுகிறது.
இதனுடன் தொடர்புடைய நபரின் மனைவி வெலிமடை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், விவாசாயியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவருடன் வாழ்ந்து வரும் இப்பெண், கணவரின் நண்பருடன் சில காலமாக இரகசியமாக தொடர்பு வைத்திருந்த நிலையில், இவர்களது கள்ள தொடர்பை , கணவன் பிடித்தால் பிரச்சனையாகும் என நினைத்து இந்த கொலை திட்டத்தை செயல்படுத்தியுள்தாக கூறப்படுகிறது.
இதன்படி வெலிமடை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண்ணும் அவரது பிள்ளைகளும் வெலிமடையில் உள்ள பெற்றோரை பார்க்கச் செல்வது போல் அனுப்பிவிட்டு, குறித்த நபரை , கள்ள காதலன் கூலி கொலைகாரரோடு இணைந்து விவாசாயியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பெண் தனது குழந்தைகளுடன் வெலிமடையில் இருக்கும்போது, அவரது முறைகேடான காதலன், அந்த பெண்ணின் கணவனான விவசாயியை கொலை செய்ய திட்டமிட்டு கூலி கொலையாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அந்தத் திட்டத்தின்படி, நேற்றிரவு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இந்த வாடகைக் கொலையாளிகள் , கொலை செய்யப்படவிருந்த விவசாயி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் அரவமின்றி நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டுக்குள் பிரவேசித்த வாடகைக் கொலையாளிகளுடன் பிரதான சந்தேகநபர் வீட்டுக்குள் பிரவேசித்து, ஏற்கனவே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த படுக்கைக்குச் சென்று விவாசாயியின் கழுத்தை இறுக்கமாகப் பிடித்து, வாடகை ஒப்பந்தக்காரர்கள் கழுத்தை அறுப்பதற்கு உதவியுள்ளார் என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தூங்கிக் கொண்டிருந்த விவசாயியின் கழுத்தை நோக்கி வெட்டிய வாள் வீச்சு தவறி, வாடகைக் கொலையாளி ஒருவரின் வலது கை விரல்களை வெட்டியுள்ளது.
வாள் வீச்சு தவறி வாடகைக் கொலையாளிகளில் ஒருவரது அனைத்து விரல்களும் வெட்டப்பட்டு ,பலத்த சேதம் ஏற்றபட்ட போதும், விவசாயியின் கழுத்திலும் வாள் வெட்டு வீழ்ந்துள்ளது.
வாள் வெட்டு விழுந்ததும், விவசாயி பலமாக எழுப்பிய சத்தம் கேட்டு , அதற்கு முன்தினம் இரவு வந்து வேறோர் அறையில் உறங்கிக் கொண்டிருந்த உறவினர் எழுந்த சத்தத்தில் கொலை செய்ய வந்தோரும் , கொலைக்கு திட்டமிட்டவரும் தப்பி ஓடியுள்ளனர்.
அச்சமயம் உறவினர் போட்ட சத்தம் கேட்டு அயலவர்கள் வீட்டினுள் சென்று படுகாயமடைந்த விவசாயியை ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனமடுவ வைத்தியசாலையில் இருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் , அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சம்பவத்திற்கு முகங்கொடுத்த விவசாயி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய விவசாயின் உற்ற நண்பனை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்த போலீசாருக்கு , ஒரு நாள் கழித்தே பின்பே சம்பவத்தின் மூலத்தை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இதன்படி ஒப்பந்த கொலையாளிகளாக ஒப்பந்தம் பெற்ற நீர்கொழும்பு பிரதேசவாசிகள் இருவர் போலியான பெயர்களில் ராகம பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்து அவர்களும் கைதாகியுள்ளனர்.
கொலை பின்னணியை அறிந்த போலீசாரால், வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விவசாயியின் கழுத்தை அறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகளும் வீசியெறியப்பட்ட ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.