பதவிகள் நிரந்தரம் இல்லை; ஜீ.எல். பைத்தியகாரன்- மஹிந்த
“கட்சியை விட்டு வெளியேறியோ – அரசிலிருந்து வெளியேறியோ கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும். அதுதான் பீரிஸுக்கும் நடந்தது” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மொட்டுக் கட்சியின் தவிசாளராகச் செயற்பட்டு வந்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டு அப்பதவிக்கு சிரேஷ்ட பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தற்போது டலஸ் அணி பக்கம் உள்ள பீரிஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மொட்டுவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச எம்.பி. கருத்துத் தெரிவிக்கும் போது,
“பதவிகள் நிரந்தரம் இல்லை. அது முதலில் தேடி வரும், பின்னர் பறிபோகும் அல்லது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வரும். நாட்டின் நன்மை கருதி பிரதமர் பதவியைக்கூட நான் இராஜிநாமா செய்திருந்தேன்.
தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபையின் தீர்மானத்துக்கமைய மொட்டுவின் தவிசாளராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நீக்கப்பட்டு புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் சபையின் இந்த நடவடிக்கையை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. கட்சியின் கோட்பாட்டை மீறிச் செயற்பட்ட காரணத்தால்தான் பீரிஸின் பதவி பறிபோனது. இதுதான் உண்மை.
கட்சியை விட்டு வெளியேறி – அரசிலிருந்து வெளியேறி கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்பவர்களின் பதவிகள் பறிபோகும்
பீரிஸுக்குப் பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அந்த அழைப்புக்களை அவர் உதாசீனம் செய்திருந்தார்.” – என்றார்.
மேலும் ஜீ.எல்.பீரிஸ் , தன்னை கட்சியை விட்டு அகற்ற முடியாது என்கிறாரே என ஒரு ஊடகவியளாளர் கேள்வி எழுப்பிய போது , ஜீ.எல். பைத்தியகாரன் என மஹிந்த ராஜபக்ச பதிலழித்தார்.
வீடியோ:-