நாளை ஹர்த்தால்! – தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஓரணியாக முழு ஆதரவு.

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது.

“வடக்கு – கிழக்கில் அரசின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிராகவும் நாளை செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஹர்த்தால் ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். போராட்டக்காரர்களின் – மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் கொடூர சட்டவரைவையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் பிரதிநிதிகளான நாம் எப்போதும் மக்களின் பக்கம் நின்றே செயற்படுவோம்” – என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் வடக்கு – கிழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். வடக்கு – கிழக்கில் சிங்கள – பௌத்த மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தமிழர் மீது 40 வருடங்களுக்கு மேலாகத் தலைவிரித்தாடிய கொடிய பயங்கரவாதச் தடைச் சட்டம் புதுப்பிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

“பௌத்த – சிங்கள இராணுவமயமாக்கும் அரசின் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த ஹர்த்தால் ஆரம்பமே. நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஜனநாயகத்தை ஒடுக்க புதிய வடிவில் அரசாங்கம் கையாளும் ஆயுதமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். அதை அனுமதிக்க முடியாது” – என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

“நாம் எங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டும். அதைச் செய்யத் தவறினால் அரசின் நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்குச் சொல்லப்படும். அதை அவர்களும் ஏற்கும் அபாயம் இருக்கின்றது. எனவே நாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சிங்கள – பௌத்த மயமாக்கல் ஆகியனவற்றை ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும்” – என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவுகளை முழுமையான உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே அதைவிட மோசமான சட்டத்தை அனுமதிக்க முடியாது. எமது பிரதேசத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலும் தொன்மங்களை அழிக்கும் வகையிலும் ஸ்ரீலங்கா அரசின் பல்வேறு நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதியால் முடியும். இதற்கு கால அவகாசம் தேவையில்லை. அதனை உடனடியாகச் செய்யவேண்டும்” – என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

“எங்களது விடுதலைப் போராட்டத்தை ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் பயங்கரவாதமாகத்தான் சித்தரித்திருக்கின்றன. எனவே, பயங்கரவாதம் என்ற சொல்லுடன் வருகின்ற சகல சட்டங்களையும் நாங்கள் எதிர்க்கவேண்டும். இல்லையெனில் எமது விடுதலைப்போராட்டத்தை முடக்கிவிடுவார்கள்” – என்று புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

“இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் நாமில்லை என்பதை நிறுவுவதற்கு சிங்கள – பௌத்த பேரினவாதம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதை நாம் முறியடிக்கவேண்டும். ஹர்த்தாலுக்கு அனைத்து மக்களும் ஒன்றுபட்டு ஆதரவு வழங்கவேண்டும்” – என்று செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேன் தெரிவித்தார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வலிகளை அனுபவித்தவன் நான். அதைவிட மோசமான சட்டம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எம்மை ஒடுக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாம் ஆதரிக்க முடியாது” – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் – முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஸ்தம்பிக்கச் செய்வோம். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சிங்களவர்களும் எதிர்க்கின்றார்கள். நாமும் அதை எதிர்க்கவேண்டும். மிகமோசமான அந்தச் சட்டம் கைவிடப்படவேண்டும்” – என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.