வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு ஜே.வி.பி.யும் ஆதரவு!

“கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பறிக்கும் மூர்க்கத்தனமான சட்டமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். இதற்கு எதிராக யார் போராடினாலும் எமது ஆதரவு இருக்கும். வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவுகளை வழங்குகின்றது.”
இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:–
“மக்கள் விரோத ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர். இதற்கு எதிராக மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைக் கோரி நிற்கின்றார்கள்.
மக்களை முடக்குகின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் முடியாவிட்டால் நாடாளுமன்றத்தின் வெளியில் நின்றாவது தோற்கடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி செயற்படும்.
தனித்தனியாக யார் இதற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினாலும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் ஆதரவை வழங்குவோம் – என்றார்.