தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது – இந்திய பார் கவுன்சில்
தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
கடந்த ஆண்டு இரண்டு தன்பாலின திருமண தம்பதிகள் தங்களின் திருமண உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தன்பாலினத்தவர் இடையேயான திருமணம் போன்ற நிலையான உறவுகளை தாங்கள் சிந்தித்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். இதனிடையே தன்பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் கருத்துகளைத் தெரிவிக்க கடந்த 19ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியது.
இதனால் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படலாம் என்று பரவலாக கருத்து எழுந்துள்ள நிலையில், பார் கவுன்சில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ள இந்திய பார் கவுன்சில் தலைவர் மணன் குமா மிஸ்ரா, தன்பாலின திருமணங்களால் நாட்டின் கலாசாரம் மற்றும் சமூக கட்டமைப்பு சிதையும் என்றார். எனவே உச்சநீதிமன்றம் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், முக்கிய பிரச்னையான இவ்விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் வசம் விட்டுவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.