12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு தமிழிசை ஆதரவு
தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்யலாம். வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
தி.மு.க அரசின் முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு முதன்முறையாக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியும் 12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
இந்நநிலையில, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், 12 மணி நேர வேலை முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ‘அதிக நேரம் வேலை செய்துவிட்டு அதிக நேரம் ஓய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 மணி நேர வேலை விவகாரத்தை தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும். அதில் அரசியல் செய்யக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.