ஆலமரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த மேற்கு வங்கப் பெண்!
இன்றைய நவீன யுகத்தில் பலருக்கும் இயற்கை வளங்களை பற்றிய புரிதல் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மரங்களைப் பற்றியும் காடுகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. காடுகளை வளர்ப்பதற்கு பதிலாக மரங்களை அதிக அளவில் வெட்டி மிகப்பெரும் அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இவை மிக விரைவிலேயே மனித குலத்திற்கு மிகப்பெரும் பேரழிவை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் காரணமாகத்தான் பல்வேறு அமைப்பினரும் அரசாங்கமும் கூட மரங்களை அதிகம் வளர்ப்பதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆலமரத்தை சிறு வயதிலிருந்து தன்னுடைய குழந்தையை போல வளர்த்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மெமாரி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தன் குழந்தை போல வளர்த்த ஆலமரத்திற்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. அந்த குறிப்பிட்ட ஆலமரத்தை அவர் தன்னுடைய குழந்தையாக நினைத்து வளர்த்து வந்துள்ளார். மரம் சிறிய கன்றாக இருந்ததிலிருந்தே அவர் இதை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது. தற்போது மிகப் பெரும் அளவில் வளர்ந்து கிளைகளை பரப்பி பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
அந்த ஆலமரத்தை தன்னுடைய மகனாகவே கருதி வந்த அந்த பெண்மணி தன்னுடைய மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க ஆசைப்பட்டு உள்ளார். ரேகா தேவி என்ற பெயர் கொண்ட அந்த பெண்மணிக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.
எனவே இதற்கு அடுத்தபடியாக தன்னுடைய மகனாக பாவித்து வரும் அந்த ஆலமரத்திற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். மீண்டும் ஒரு நாள் தன்னுடைய மகனுக்கான பெண்ணையும் அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அப்பெண்மணியின் கணவரும் தன்னுடைய மரணத்திற்கு முன்னர் கண்டிப்பாக அந்த ஆலமரத்திற்கு திருமணம் செய்து வைப்பேன் என்று வாக்குறுதியளித்துள்ளார்.
இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் உள்ளவரிடம் இருந்து தேவையான அளவு நிதி திரட்டி, ரேகா தேவி அவர் மகனாக வளர்த்த ஆலமரத்திற்கு திருமணம் செய்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில் “அந்த நாளில் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருமணத்தை பாரம்பரிய முறைப்படி நடத்தி வைத்தோம். பூசாரி ஒருவர் மரத்திற்கு புடவை மற்றும் வேஷ்டி ஆகியவற்றை அணிவித்து குங்குமம் வைத்தார் பிறகு அனைவரும் ஒன்று கூடி அந்த திருமணத்தை விமர்சையாக நடத்தி வைத்தோம்”. என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
பாரிஜாத் நகர் பகுதியில் உள்ள மெமாரி காவல் நிலையத்திற்கு அருகே நடந்த இந்த திருமணத்திற்கு உள்ளூர்வாசிகள் பலரும் மாலை வேளையில் ஒன்று சேர்ந்து ஆலமரத்திற்கான இந்த திருமணத்தை மிகவும் விமர்சியாக நடத்தி வைத்தனர். தன் மகனாக நினைத்து வளர்த்த ஆலமரத்திற்கு திருமணம் செய்து வைத்த அந்த பெண்மணி அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தார்.