கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல்கள் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த முரளி ரம்பாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நாளன்று எடப்பாடி பகுதியை சேர்ந்த ஜோதிடரை சந்தித்ததாகக் கூறப்படுவதால், அந்த ஜோதிடரிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மே முதல் வாரத்தில் சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.