சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை கர்நாடகா மாநிலத்திற்குள் அண்ணாமலை நுழைய தடை விதிக்க வேண்டும் – காங்கிரஸ் புகார்
சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை கர்நாடகா மாநிலத்திற்குள் அண்ணாமலை நுழைய தடை விதிக்க வேண்டும் எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகார் மனுவில், 2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை, நட்சத்திர பேச்சாளராக கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்வதாகவும் அவரது பேட்ச்சை சேர்ந்தவர்களும் அவருக்கு கீழ் முன்னர் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளும் தற்போது தேர்தல் தொடர்பான முக்கிய பதவிகளை வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும் இருப்பதால் அவர் அக்கட்சிக்கு சாதகமாக செயல்படும்படி காவல்துறையினரை நிர்ப்பந்திப்பதாக புகாரில் கூறியுள்ள காங்கிரஸ், முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற வகையில் தேர்தல் இயந்திரத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அவரது வாகனத்தை போலீசார் சோதனையிடுவதில்லை என்பதால், அவர் பணத்தையும் ஆட்களையும் கடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் நியாயமான நேர்மையான தேர்தலை நடத்த நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை ரத்து செய்வதுடன், தேர்தல் முடியும் வரை அவரை கர்நாடகாவினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் புகார் மனுவில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.