IMF ஒப்பந்தத்தில் எதையும் மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்த வேண்டும்! – அரசிடம் அஜித் பெரேரா வலியுறுத்து.
“சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தத்தில் எதையும் மறைக்காமல் அரசு அப்படியே நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைத்ததும் சிலர் பட்டாசு சுட்டு மகிழ்ந்தார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு அப்படி உதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால், இதில் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதுதான் இந்தக் கடனைப் பெறுவதற்காகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தம். அதில் எதையும் மறைக்காமல் அரசு அப்படியே அந்த ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதை மக்கள் கட்டாயம் அறிய வேண்டும்.
அரசால் முகாமைத்துவம் செய்ய முடியாத அரச நிறுவனங்கள் கட்டாயம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், பெற்றோலியம் நட்டத்தில் ஓடவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் புதிய பெற்றோல் செட்களை திறப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்?
போட்டி கூடும்போது விலை குறைந்தால் பரவாயில்லை. இங்கு விலை பற்றி எந்தப் பேச்சும் இல்லை. இதனால் எமது பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப் போகின்றது.” – என்றார்.