தன்பாலினத் திருமணம் குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசு
இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதன் 5 ஆம் நாள் விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
தன்பாலினத் திருமணத்தில் சமூக பிரச்னைகள் நிறைந்திருப்பதால், நாடாளுமன்றம் முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும் என்று மேத்தா கூறினார். தன்பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் அடையாளமான LGBTQ++ -ல் உள்ள பிளஸ் என்பதற்கான அர்த்தம் என்ன என்று தெளிவான விளக்கமில்லை என்று மேத்தா வாதிட்டார்.
மேலும், தன்பாலினத் திருமணத்தை தீர்ப்புகள் மூலம் வரையறுப்பது மிகவும் கடினம் என்று மேத்தா தெரிவித்தார். சுற்றுச்சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப பாலினத்தை மாற்றும் மோசமான நிலை உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது, தன்பாலினத் திருமணத்தை நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என்றால், நீதித்துறைக்கான அதிகாரம் என்ன என்று தலைமை நீதிபதி வினவினார்.
பின்னர், தொடர்ந்த வாதத்தில், இந்தியா மரபுப்படி திருமணத்திற்கான அர்த்தம் என்ன என்பதை மேத்தா விளக்கினார். சிறப்பு திருமணச் சட்டத்தில் கூட, தன்பாலின திருமணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றார். இந்து திருமணச்சட்டத்தை இயற்றியபோது தன்பாலினம் திருமணம் குறித்து எழுந்த கேள்விக்கு அப்போதைய உறுப்பினர்கள் அளித்த பதிலையும் மேத்தா முன்வைத்தார்.
மற்ற நாடுகளில் தன்பாலினத் திருமணத்திற்கான அங்கீகாரங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். மேலும் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை மாகாணங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிகாட்டி மேத்தா வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், கருக்கலைப்பு தொடர்பான அமெரிக்கா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிகாட்டுவது ஏற்புடையதல்ல என்றார். கருக்கலைப்பு விவகாரத்தில் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட மேத்தா, அந்த வழக்கின் தீர்ப்பு படி, மாகாணங்களிடம் முடிவை ஒப்படைக்கவே அதனை குறிப்பிட்டதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.