கிராமத்தை சுத்தம் செய்து தனித்துவமான முறையில் ஈத் பண்டிகையை கொண்டாடிய பெண்கள்…!

சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்களது முக்கிய பண்டிகையான ரமலானை, நோன்பு நோற்று முடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இந்தியாவின் லடாக்கில் உள்ள கரித் என்ற தொலைதூர கிராம மக்கள், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை தனித்துவமான முறையில் கொண்டாடி சமூகத்திற்கும் தங்களது கிராமத்திற்கும் நன்மை செய்து உள்ளனர்.

லடாக்கின் கரித் (Karith) கிராமம் புனித இஸ்லாமியப் பண்டிகையான Eid-al-Fitr-ஐ பயனுள்ள மற்றும் தனித்துவமான முறையில் கொண்டாடி இருக்கிறது. இந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்வதன் மூலம் வித்தியாசமான முறையில் பண்டிகையை உள்ளூர் பெண்கள் கொண்டாடி இருக்கிறார்கள். ரம்ஜான் தினத்தன்று க்ளீனிங் ஒர்க்கில் பங்கேற்று தங்கள் பகுதியை சுத்தம் செய்து உள்ளனர்.

பண்டிகை தினத்தன்று சுய உதவிக்குழுவினரின் ஆதரவுடன் கிராம மக்கள் திரளாக வந்து அப்பகுதியில் குவிந்து மற்றும் சிதறி கிடந்த பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தங்களது கிராமத்தை சுத்தம் செய்தனர். இந்த தூய்மை நிகழ்வில் பெண்கள் திரளாக பங்கேற்று தங்களது வசிப்பிடம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ததை காண முடிந்தது.

இந்த முயற்சி உள்ளூர் பெண்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள உள்ளூர் சுயஉதவி குழுவால் முன்னெடுக்கப்பட்டது. கிராமத்தை சுத்தம் செய்யும் இந்த முயற்சியில் பெண்கள் அதிகம் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இவர்களின் இந்த முயற்சி மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தியது. நாம் வசிக்கும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும், இயற்கைக்கும் – மக்களுக்கும் இடையே சமநிலையை பேணுவதும் மிக முக்கியமானது. லடாக் Ecologically Sensitive Zone என்பதால் உள்ளூர் வாசிகள் தங்கள் கிராமத்தை சுத்தம் செய்வது தொடர்பாக மீடியாக்களில் வெளியான படங்கள் அனைவரது மனதையும் கவர்ந்தன.

இதனிடையே பண்டிகை தினத்தன்று கிராம தூய்மை பணியில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், இது போன்ற முயற்சிகளால் பசுமை இந்தியாவை அடைய முடியும் என்றும், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் இலக்கு என்றும் கூறி இருக்கிறார்கள்.

இந்த தூய்மைப்பணி தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளூர் கிராமவாசி ஒருவர், மனித இனத்தின் இருப்புக்கு தூய்மை மிகவும் இன்றியமையாதது என்ற செய்தியை மக்களிடையே பரப்ப எங்களது கிராம மக்கள் விரும்பினர், இதுவே எங்களது குறிக்கோளும் கூட என குறிப்பிட்டுள்ளார். தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஒரு பெண் பேசுகையில், ஈத் பண்டிகையை கொண்டாட சிறந்த வழியாக நாங்கள் வசிக்கும் கிராமத்தை சுத்தம் செய்வதை முன்னெடுத்துளோம் என்று கூறினார்.

தூய்மை பணியின் போது “எங்கள் கரித் கிராமம் சுத்தமானது” என கோஷங்களை உள்ளூர் மக்கள் எழுப்பினர். “க்ளீன் கரித்”என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சியை பார்த்து இப்போது மற்ற அண்டை கிராம மக்களும் இதே போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களிலும் கூட இந்த கரித் கிராமம் முன்னுதாரணமாக இருந்தது. இதே போன்ற பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பல கிராமங்களுக்கு முன்மாதிரி கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தின் Yuva Karith Group-ஐ சேர்ந்த Mohd Hasan கூறுகையில், எங்கள் கிராமம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடிய பல முயற்சிகளை இதற்கு முன்பும் செய்துள்ளது. எங்களை போன்ற தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆரோக்கியமான கிராமம் என்பது மிக முக்கியமானது என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.