அமெரிக்காவுக்கான தடை குறித்து அலட்டிக்கொள்ள விரும்பவில்லை! – வசந்த கரன்னாகொட கூறுகின்றார்.
அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநரிடம் ஊடகங்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை” – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.