மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இன்று பதவிப்பிரமாணம்
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதற்கமைய நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு செய்தி
மரண தண்டனைக் கைதி பிரேமலால்
இன்று எம்.பியாக சத்தியப்பிரமாணம்
– சபையில் எதிரணியினர் போர்க்கொடி
மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துகொண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன.
அரசமைப்புக்கமைய மரண தண்டனைக் கைதியொருவர் எம்.பியாக பதவியேற்க முடியாது என்று எதிரணியினர் கோஷம் இட்டனர்.
ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தே அவருக்கு எம்.பியாகப் பதவியேற்க அனுமதியளிக்கப்பட்டது எனச் சபாநாயகர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் அவர் எம்.பியாகப் பதவியேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.