பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ; 7 பயணிகள் கருகி சாவு.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு இந்த ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ரெயிலின் அந்த பெட்டி மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் பலர் ரெயிலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இதனால் மீட்பு பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது.
ரெயிலில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் பெட்டி தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய பல ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.