மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி…!
சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சிலை அமையும் பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றது.
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து கடலோர ஒழுங்கு முறை மண்டலமும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேனா சின்னம் அமைப்பதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும், பேனா சின்னம் கட்டுமானப் பணிக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது, திட்டத்தை செயல்படுத்தும்போது கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது உட்பட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.