மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்: பாஜக எம்.பி மீது போக்சோ வழக்குப்பதிவு
மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தேசிய முகாமில் பல பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, வீராங்கனைக பாலியல் புகார் தெரிவித்தனர்.
மேலும் பாலியல் சீண்டலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு கபில்தேவ், சானியா மிர்சா, நீரஜ் சோப்ரா என பலதுறை விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, வீராங்கனைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த டெல்லி காவல்துறை தரப்பு, உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தது. அதன்படி, பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.