ஒரு நாள் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் கூட, ராகுலின் எம்.பி. பதவி இருந்திருக்கும் – ராகுல் வழக்கறிஞர்
2 ஆண்டிற்கு, ஒரு நாள் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் கூட, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்காது குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் ஆதங்கப்பட்டார்.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கில், ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை, மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது, மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால், ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள அரசு குடியிருப்பையும் ராகுல் காந்தி காலி செய்தார்.
இதனிடையே தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் முறையிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, காரசாரமான வாதங்களை முன்வைத்தார். நாட்டில் இதுவரை இல்லாத வகையில் அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
2 ஆண்டிற்கு, ஒரு நாள் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் கூட, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்காது என்று வாதிட்டார். அடிப்படை முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டில், உரிய விசாரணையின்றி மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை விதிப்பது பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். இந்நிலையில், மே 2 ஆம் தேதி இரண்டு தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.