போராடிய சிஎஸ்கே… கடைசி பந்துவரை பரபரப்பு.. த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 28 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 42 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். அதர்வா 13 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் லியாம் லிவிங்ஸ்டோன்- சாம் கர்ரன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். அதிரடி காட்டிய விங்ஸ்டோன் 4 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்னும், சாம் கர்ரன் 20 பந்துகளில் 29 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
அப்போது அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்தது. அவர்களைத் தொடர்ந்து இணைந்த ஜிதேஷ் சர்மா, ஷாரூக் கான் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஜிதேஷ் சர்மா 21 ரன்கள் சேர்த்தார்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. முதல் பந்தில் சிக்கந்தர் ரசா ஒரு ரன், இரண்டாவது பந்து லெக் பை என இரண்டு ரன்களே கிடைத்தது. மூன்றாவது பந்தில் ரன் இல்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்கந்தர் ரசா தலா 2 ரன் அடித்தார்.
இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், சரியாக 3 ரன் எடுத்தார் சிக்கந்தர் ரசா. இதனால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.