யாழ். குடாநாட்டில் தவறான முடிவுகளை எடுத்து உயிர்மாய்ப்போர் எண்னிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் 54 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை யாழ். மாவட்ட பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜகத் விசாந்த மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய அத்தியட்சகர் எம் டபிள்யூ சந்தனகமகே ஆகியோர் தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 175 பேர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 166 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில். இவர்களில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 59 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 42 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 39 பேரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்பட்டவேளை காப்பற்றப்பட்ட சுமார் 50 பேர் வரையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இந்த ஆண்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.