11 பேர் உயிரைப் பறித்த பஞ்சாப் வாயுக் கசிவு : காரணம் என்ன?
பஞ்சாபின் லூதியானாவில் நடந்த வாயுக் கசிவு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை உலுக்கி உள்ள விஷ வாயு தாக்குதலுக்கு காரணம் நியூரோ டாக்ஸிக் வாயு ( neurotoxic gas) என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாயு, நரம்புகளைத் தாக்கும் நச்சுத்தன்மை கொண்டது. விஷ வாயு தாக்கி உயிரிழந்தோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், மூச்சுத் திணறலால் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை இந்த வாயு ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நியூரோ டாக்ஸிக் வாயுவால் நியூரோடாக்சிசிட்டி ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட நியூரோ டாக்ஸிக் பொருட்கள் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை மாற்றும்போது நியூரோடாக்சிசிட்டி ஏற்படுகிறது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சிக்னல்களை கடத்தும் நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்களை சீர்குலைக்கும் ஆபத்துகள் உள்ளன.
லூதியானாவை பொறுத்தவரை பால் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் இந்த வாயு வெளியாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டேங்க் ஒன்றில் மீத்தேன் வேதிமாற்றம் அடைந்து வாயு கசிவு ஏற்பட்டதாகவும் முறையான பராமரிப்பு இன்மையே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சிறிது நேரம் இந்த நியூரோ டாக்ஸிக் வாயுக்களைச் சுவாசித்தாலே மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அப்படியொரு மோசமான சம்பவம் தான் பஞ்சாபில் நடந்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.