ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவரை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழ் பிரஜை ஒருவரை நாடு கடத்த முயல்வதற்கு எதிரான பிரச்சாரம் , இலங்கை அரசாங்கத்தின் மீது மீண்டும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஜேர்மனியில் குடிவரவு பொலிஸாரின் பிடியில் உள்ள தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளராக கருதப்படும் “சுதா” என்பவரை திடீரென இலங்கைக்கு நாடு கடத்த ஜேர்மன் அதிகாரிகள் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜேர்மன் அதிகாரிகள் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயன்றனர், ஆனால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் அதை மறுத்ததால் முயற்சி தோல்வியடைந்தது. குறித்த தமிழர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தமையால் அவரை விமானத்தில் கொண்டு செல்ல மறுத்தனர்.
நாடு கடத்தும் தீர்மானத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் அடிப்படையிலான பிரதான வாதம் இலங்கை தமிழ் மக்கள் இனப்படுகொலையை எதிர்நோக்குகின்றனர் என்பதேயாகும். அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.