அனைவரும் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க வேண்டும்! – மே தின உரையில் ருவான் கோரிக்கை.
நாம் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பலமாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-
“சில கட்சிகள் உழைக்கும் மக்களை ஒடுக்கப்பட்ட வர்க்கமாக மாற்றவும், போராட்டங்களில் மட்டும் அவர்களை மட்டுப்படுத்தவும் பாடுபட்டன. இதனால், ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் தனது சொந்த அரசியல் பயணத்துக்காக உருவாக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி உழைக்கும் மக்களை போராட்டங்களுக்காக நசுக்கி வைக்கவில்லை. மக்களுக்கு சலுகைகள் அளித்து அவர்கள் நல்ல வாழ்க்கை வாழக்கூடிய இடத்துக்குக் கொண்டு வர நாங்கள் உழைத்தோம்.
உழைக்கும் மக்களுக்கு சலுகைகள் கிடைக்க, வலுவான பொருளாதாரம் இருக்க வேண்டும். இந்த நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் . அதைச் செய்ய, பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்ற வேண்டும். கடந்த ஆண்டு இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். மாற்றம் வேண்டும் என்றார்கள். ஆனால், போராட்டக்காரர்களில் பத்துப் பேரின் கருத்து பத்துவிதமாக இருந்தன.
வரலாற்றில் சில சமயங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து, குறுகிய கால கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் குறுகிய கால முடிவுகளை எடுக்க முடியாது. நீண்ட கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க, ‘வெல்வோம் 2048’ என்ற திட்டத்தை முன்வைத்தார். 2048 இல் நம்மில் பெரும்பாலானோர் உயிருடன் இருக்க மாட்டோம். ஆனால், இந்தக் குழந்தைகளுக்கு வளர்ந்த நாட்டில் வாழ வாய்ப்பளிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு நாம் அனைவரும் ஜனாதிபதிக்குப் பலமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் வளர்ந்த நாடுகளுடன் இணைந்திருக்க முடியும்.” – என்றார்.