நாட்டை அபிவிருத்தி செய்ய ஐ.தே.க. தலைவர்கள் திட்டம் – கட்சியின் பொதுச்செயலர் அறிவிப்பு.

“2048 இல் இலங்கையை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர்” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பூரண ஆசீர்வாதத்துடன் இந்த மே தினக் கூட்டம் நடைபெறுகின்றது. சவால்கள் எதிர்கொள்ளும் போது அதிகமான அரசியல் கட்சிகள் அவற்றில் இருந்து தப்பித்துச் செல்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு சவால்களை வென்றெடுத்துள்ளது. சவால்களை ஏற்று சவால்களை வெல்வதற்கு வரலாற்றில் எமது தலைவர்களுக்கு எமது கட்சி தலைமைத்துவம் வழங்கியது.
அன்று தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு இந்நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி தராததால் அவர் மக்களை வெறுக்கவில்லை. சகித்துக்கொண்டு நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்.
2001ல் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நாட்டைப் பொறுப்பேற்றார். பொருளாதார வளர்ச்சி மறை 1.5 இற்குச் சரிந்திருந்த நிலையில் மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து முன்னேற்றினார்.
2015 இல் கூட பிரதமராக நாட்டை சரியாக நிர்வகித்து நாட்டை அவர் அபிவிருத்தி செய்தார்.
2022 ஆம் ஆண்டு வங்குரோத்தடைந்த அரசை சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தச் சவால்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2048 இல் இலங்கையை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை இல்லை. இவ்வளவு தியாகம் செய்யும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் வேறு யாரும் இல்லை. 2048 இற்குள் கண்டிப்பாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்றார்.