ரணில் எவரையும் பழிவாங்கவில்லை! – மே தின உரையில் அகில விராஜ் தெரிவிப்பு.
“இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் படிப்படியாக முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார். பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவர் யாரையும் பழிவாங்கவில்லை.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த வருடம் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் இக்கட்டான நேரத்தில் மே தினத்தைக் கொண்டாடியது.1956 தேர்தலில் தோல்வியடைந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது. 1970 இல் ஐக்கிய தேசியக் கட்சி புதைக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
1988 இல் ஜே.வி.பியினர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். 1993 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எமது முன்னாள் தலைவர்களை வெடிகுண்டுகளால் அழிக்க முயன்றனர். 2020 இல் கட்சியை இரண்டாகப் பிரித்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். ஆனால், இன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது.
ஆனால், இறுதியில், எங்கள் கட்சியின் தலைவர், நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு யாரும் அந்தச் சவாலை ஏற்க முன்வரவில்லை.
இன்று அவர் இந்த நாட்டைப் படிப்படியாக முன்னோக்கிக் கொண்டு செல்கின்றார். பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவர் யாரையும் பழிவாங்கவில்லை.
இந்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, 2048இல் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அவர் தோள் கொடுத்துள்ளார்.” – என்றார்.