ஆன்லைன் உணவு டெலிவரி.. அதிரடியாக உயரும் கட்டணம் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆண்டு சந்தாவும், டெலிவரி கட்டணமும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
உதாரணமாக, ஒரு சிக்கன் பிரியாணியை உணவகத்துக்கு நேரில் சென்று சாப்பிடும் விலை 150 முதல் 250 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் சந்தா இல்லாத வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 50 ரூபாய் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் சராசரியாக உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவோர் ஆண்டு சந்தாவாக 2,200 ரூபாய் செலுத்தி வந்த நிலையில், இது மேலும் அதிகரித்துள்ளது. இலவச உணவு டெலிவரி என்று நிறுவனங்கள் கூறினாலும், குறைந்தபட்சம் 150 ரூபாய்க்காவது ஆர்டர் செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.
உணவு டெலிவரி நிறுவனங்கள் வழங்கும் ரசீதுகளில் வரி என்று மட்டுமே உள்ளது. ஆனால் எந்த வகையான வரி என்று குறிப்பிடப்படுவது இல்லை. ஒவ்வொரு உணவும் வழக்கமான விலையை விட கூடுதல் விலை இருப்பதாக பல புகார்களும் குவிந்துள்ளன.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பணத்துக்கு வெளிப்படையான பில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.