கரூர் மாவட்டத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்…!
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவர் – சிறுமிகள் பள்ளி விடுமுறை என்பதால், ஒன்றாக சேர்ந்து நூடுல்ஸ் செய்ய முடிவு செய்தனர். இதற்காக மளிகை கடையில் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி, பெருமாள் என்பவரின் தோட்டத்தின் அருகே சமைத்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எண்ணெய் என்று நினைத்து அதனை நூடுல்சில் ஊற்றி கிளறி உள்ளனர்.
பின்னர் சிறுவர் – சிறுமிகள் அந்த நூடுல்சை சாப்பிட்டுள்ளனர். சிலர் தங்களது வீட்டுக்கு எடுத்து சென்று சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 பேருக்கும் தோகமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.