ஆந்திராவில் பழமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து…!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரம் அருகே புத்தாள கால்வாய் மீது நூறாண்டு பழமையான ராமச்சந்திரா மகாராஜ் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தை 1929 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் விஷ்கவுண்ட் கோஷென் திறந்து வைத்தார்.
மிகவும் பழமையான அந்த பாலத்தை அதிகாரிகள் நீண்ட காலமாக பராமரிக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பாலம் வாகன போக்குவரத்துக்கு தகுதியானதா என்பதை ஆய்வு செய்யவும், கனரக வாகனங்கள் பாலம் மீது செல்ல அனுமதி அளிப்பது பற்றி ஆய்வு செய்யவும் அதிகாரிகள் தவறிவிட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பாலத்தின் மீது கனரக வாகனம் ஒன்று சென்ற போது திடீரென்று பாலம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், ஒரு கார் ஆகியவை இடிபாடுகளுடன் கால்வாயில் விழுந்து சிக்கிக்கொண்டன.
அந்த நேரத்தில் வாகன போக்கு குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மீட்பு குழுவினர் ஆகியோர் வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.பாலம் இடிந்து விழுந்த காரணத்தால் இன்று காலை முதல் அந்த பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.