தி கேரளா ஸ்டோரி.. வெளியிட்டால் பிரச்னை? – தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் இஸ்லாம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில்,தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புக்கள் ஏற்படக்கூடும் என அலெர்ட் கொடுத்துள்ளது
நாடு முழுவதும் வருகின்ற ஐந்தாம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து முதலமைச்சர் பிணராயி விஜயன், “மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி தீவிரவாத அமைப்புகளில் சேர்வது போன்று இந்த படத்தில் கதை தளம் அமைக்கப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை அலர்ட் கொடுத்துள்ளது.