நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா காலமானார் (Video)

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோபாலா பயோ
நாகர்கோவில் மருங்கூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் மனோபாலா. 1953ம் ஆண்டு பிறந்த இவர், நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிபாரிசின் பேரில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார் மனோபாலா. 1979ம் ஆண்டு பாக்யராஜை ஹீரோவாக வைத்து பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் தான் மனோபாலாவின் சினிமா பயணம் தொடங்கியது.

புதிய வார்ப்புகள் படத்தில் பஞ்சாயத்து மெம்பராக ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்திருந்தார். மனோபாலாவின் ஒல்லியான உடல்வாகு நக்கலான வசன உச்சரிப்பு என நடிப்பும் தனது ஏரியா தான் என நிரூபித்தார். இதனால், அடுத்தடுத்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை என படங்களிலும் நடிகராக அசத்தினார்.
அதேநேரம் தனது இயக்குநர் கனவையும் விடாமல் துரத்திய மனோபாலா, 1982ல் ஆகாய கங்கை படத்தை இயக்கினார். கார்த்திக், சுஹாசினி நடிப்பில் வெளியான இந்தப் படம், மனோபாலாவை நல்ல இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியது. இதனால், அடுத்தடுத்து நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, சிறை பறவை, தூரத்துப் பச்சை என படங்கள் இயக்கினார்.

1980களின் இறுதியில் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ரஜினியையும் இயக்கினார் மனோபாலா. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா, பாண்டியன், ரகுவரன், மலேசியா வாசுதேவன் என பலரும் நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கினார். இந்தப் படம் ரஜினிக்கு மாஸ் ஹீரோ அடையாளத்தைக் கொடுத்தது.
ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் என்றால், இன்னொரு பக்கம் கேப்டன் விஜயகாந்துக்கும் ஃபேவரைட் இயக்குநராக காணப்பட்டார் மனோபாலா. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என விஜயகாந்துக்கு அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். ரஜினி, விஜயகாந்த் என நின்றுவிடாமல் சத்யராஜ், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கும் ஹிட் கொடுத்தார்.
மனோபாலா இதுவரை மொத்தம் 40 திரைப்படங்கள் இயக்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், 16 சீரியல்களையும் இயக்கியுள்ளார் மனோபாலா. ஆக்ஷன், காமெடி, குடும்ப சென்டிமெண்ட் என எல்லா ஏரியாக்களிலும் படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் மனோபாலா. மிக முக்கியமாக மனோபாலா திரைக்கதை எழுதுவதில் வித்தகர் என்பது பலரும் அறியாத உண்மை.
ஒருகட்டத்தில் முழுநேர நடிகனாக மாறியதும், காமெடி கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தார். விவேக், வடிவேலு, சந்தானம் என டாப் காமெடி ஸ்டார்களுடன் இவர் அடித்த காமெடி லூட்டிகள் கொஞ்சம்நஞ்சம் அல்ல. அதேபோல், சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் மனோபாலா.
இந்தப் படம் மூலம் தான் ஹெச் வினோத் என்ற அருமையான இயக்குநர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என நின்றுவிடாமல் பல முன்னணி இயக்குநர்களுடன் ஸ்க்ரிப்ட் எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவராம். பல இளம் இயக்குநர்களுக்கு மனோபாலா ஒரு குருவாக இருந்து வழிகாட்டியுள்ளார்.
மேலும், பல அரிய சினிமா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் மனோபாலா. பார்ப்பதற்கு காமெடி நடிகராக இருந்தாலும் சினிமாவின் அனைத்துத் துறையில் அவர் ஒரு ஜீனியஸ் என்பது பலரும் அறியாதது. முக்கியமாக இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு மனோபாலாவின் அருமை பெருமைகள் தெரியாதது வேதனைக்குரியது. சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் படங்களின் இயக்கியுள்ளதுடன், கமலின் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார் மனோபாலா.
இந்நிலையில், சில தினங்களாக சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை எடுத்து வந்த மனோபாலா, பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகையும் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பலரும் மனோபாலா மறைவுக்கு அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.