பள்ளி மாணவியை ஸ்கூட்டியில் துரத்தி தொல்லை கொடுத்த காவலர்…!
பொதுமக்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்கள் காவல்துறையிடம் சென்று புகார் அளித்து தீர்வு காணலாம். ஆனால், இங்கு காவலர் ஒருவரே பள்ளி மாணவிக்கு பொதுவெளியில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள சதார் பகுதி காவல்நிலையத்தில் பணிபுரிபவர் ஷஹ்தத் அலி. இவர், அப்பகுதியில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவியை தனது ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து அவரிடம் பேசி தொல்லைத் தரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் காவலர்கள் சைக்களில் செல்லும் வேகத்திலேயே தனது ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு மாணவியை பின் தொடர்ந்து செல்கிறார். மாணவியை விடாமல் பேசிக் கொண்டே செல்கிறார். இதை பின்னால் செல்லும் ஒரு பெண் கவனித்து வீடியோ எடுத்து ஆதாரமாக வைத்துக்கொண்டார்.
பின்னர் அந்த காவலரை இடைமறித்து யார் நீங்கள் இந்த மாணவிக்கு தொல்லை தருகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு ஏதேதோ கூறி காவலர் சமாளிக்கப் பார்த்துள்ளார். பின்னர், காவலர் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றக் கூறி அடையாளத்தை பார்த்துக்கொண்டார். காவலர் ஓட்டிய வாகனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் அதில் பதிவு எண் இல்லை.
வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையியல் லக்னோ காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காவலர் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு இது போன்ற தொல்லைகள் தருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என புகாரில் கூறப்பட்டுள்ளது.