மணிப்பூரில் கலவரம்: தமிழர்கள் வாழும் பகுதியில் வீடுகள் தீக்கரை!
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது.
மணிப்பூரில் வசித்து வரும் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நேற்று நடத்தப்பட்டது.
மாணவர்கள் அமைப்பு நடத்திய பேரணிக்கு பழங்குடி அல்லாதோர் எதிர்ப்பு பேரணி நடத்திய நிலையில், செளரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் மலையோர மாவட்டங்களில் வீடுகள், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
தமிழர்கள் அதிகளவில் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையோர மோரோ கிராமத்திலும் வன்முறை வெடித்ததில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்த மோதலை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறை விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பிற இடங்களிலும் கலவரம் வெடித்து வருவதால், இணைய சேவைகள் 5 நாள்களுக்கு முடக்கப்பட்டு 8 மலையோர மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புப் படைகள் விமானம் மூலம் மணிப்பூருக்கு விரைந்துள்ளன.
இந்த கலவரம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு வரும் நிலையில், பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், “எனது மாநிலம் எரிந்து கொண்டுள்ளது, தயவுசெய்து உதவுங்கள் மோடி, அமித் ஷா” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் மணிப்பூர் முதல்வர் பிரைன் சிங் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு விழா நடைபெறவிருந்த மேடைக்கு தீ வைக்கப்பட்டதால், முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.