அதிமுக அலுவலக விவகாரம் : அனைத்து ஆவணங்களையும் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு அன்று அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதலில், அலுவலகத்தில் இருந்த கட்சி தொடர்பான அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள், கட்சி பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள், உள்ளிட்ட பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஜூலை 23ஆம் தேதி சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இச்சூழலில், அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் ஒப்படைக்கக் கோரி, அதிமுக, அமைப்புச் செயலர், சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீண்டும் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.