மணிப்பூர் வன்முறை – கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கும், மாற்று சமூகத்தினருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் துணை ராணுவத்தை மத்திய அரசு மணிப்பூர் அனுப்பியுள்ளது.
மணிப்பூரில் மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் Churachandpur உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கடந்த 3ம் தேதி ஒற்றுமை பேரணி மேற்கொண்டனர். அதில் நிகழ்ந்த வன்முறையில் ஏராளமான வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
மணிப்பூரில் ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தினால் இதுவரை சுமார் 9 ஆயிரம் பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மெய்டீஸ் சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் இடையே நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், ராணுவமும் வரவழைக்கப்பட்டது.
பழங்குடியினர் ஆதிக்கம் இல்லாத மேற்கு இம்பால், கக்சிங், தவுபால், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தங்கள் மாநிலம் பற்றி எரிவதாக கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரிகோம் பதிவிட்டுள்ளார். தங்களுக்கு உதவி செய்ய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சரும் முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
நிலைமை கட்டுப்படுத்தும் நோக்கில் துணை ராணுவத்தினர் சிறப்பு விமானங்களில் மணிப்பூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர் பைரன் சிங்கிடம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூடுதலாக துணை ராணுவத்தினரை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் காவல்துறையுடன், ராணுவமும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரில் நிலையைமை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே அனுமதி அளித்துள்ளார்.
இதனிடையே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது கவலை அளிப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை கொண்டு வர பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, மணிப்பூரில் இருதரப்பினர் இடையிலான மோதலுக்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது டிவிட்டர் பதிவில், பாஜகவின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் அதிகாரத்தின் மீதான பேராசையே வன்முறைக்கு வித்திட்டதாக குறிப்பிட்டுள்ளார்.