யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையக அதிகாரிகள் விசாரணை!
யாழ்., திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சைவச் சிறுவர் இல்ல விடுதி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், நிர்வாகத்துக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய விடுதியின் முகாமையாளர் சிறுவர் நீதிமன்றத்தால் பணி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர் இல்லச் சிறுவர்களால் சிறுவர் இல்லத்தின் நிர்வாக அலுவலகம் அடித்துடைக்கப்பட்டது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரினது பெயர்கள் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு பேரில் இருவர் மார்ச் 27ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளனர். அத்துடன் சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறுவர்கள் அண்மையில் நீர்வேலியிலுள்ள சிறுவர் இல்லத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளை தனது சொந்தப் பிரேரணையாக எடுத்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. அது தொடர்பான அறிக்கை கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்துக் கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் நேற்று சிறுவர் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் இன்று அவர்கள் பேசவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.