உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம்.
உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.
எனவே ராணுவத்தை பலப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் டிரோன்களின் ராணுவம் என்ற திட்டத்தை தொடங்க போவதாக உக்ரைன் அரசாங்கம் திட்டமிட்டது. அதன்படி இந்த திட்டமானது உளவு டிரோன்களை பெருமளவில் வாங்குவதற்காகவும், ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டிரோன் ஆபரேட்டர் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் அங்குள்ள சில தனியார் டிரோன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அங்கு அந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கவும், போர் குறித்த உளவு தகவல்களை சேகரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முடித்த தன்னார்வலர்கள் மற்ற வீரர்களுக்கு டிரோன் பயிற்சி அளிப்பார்கள்.
இந்த திட்டம் குறித்து நிலையில் அந்த நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறை மந்திரி மைக்கைலோ பெடோரோவ் கூறுகையில், `இந்த டிரோன் ராணுவம் திட்டத்துக்காக இந்த ஆண்டில் இதுவரை சுமார் ரூ.26 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மேலும் 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார். இது தவிர 60 போர் டிரோன் ஆபரேட்டர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.