அருகில் உள்ளவர்களை அதிகம் நம்பக்கூடாது! – ஏமாந்த கோட்டா இப்போது கூறுகின்றார்.
“அருகில் உள்ளவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித்தான் ஏமாந்தேன்.”
இவ்வாறு உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போதே கோட்டாபய தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, “வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக் கூறி சாகரவை வரவேற்றார் கோட்டாபய.
“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” சேர் எனக் கோட்டாவிடம் கூறிய சாகர, வந்த நோக்கத்தையும் விவரித்தார்.
“அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் எப்படிப் போகின்றது?’ என்று கோட்டாபய கேட்க, “சிறப்பாகச் செல்கின்றது சேர், எமது கட்சிக்கு எதிராகப் பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை தற்போது அவிழ்த்து வருகின்றோம்” என்று பதிலளித்தார் சாகர.
“அருகில் உள்ளவர்களை அதிகம் நம்பக்கூடாது சாகர. நானும் அவ்வாறு நம்பித்தான் ஏமாந்தேன். பதவிகளை வழங்கினேன். அவர்களை நம்பியது என் தவறுதான்” என்று கூறி கலங்கினார் கோட்டாபய.
“சேர், பழைய கதை வேண்டாம். நாம் முன்நோக்கிச் செல்வோம்” என்று கூறி விடைபெற்றார் சாகர.