சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம் – தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!
சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குந்தை திருமண குற்றச்சாட்டில் சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 ஆண்கள் , 3 பெண்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதாகவும், ஆனால், அவர்களை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சிறுமிகள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல் என்றும், அது போன்ற நிகழ்ந்து நடந்ததாக தகவல் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 4 குழந்தை திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன என்பதால், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை தொடர்பாக ஆளுநர் ரவி குற்றம் சாட்டிய நிலையில் அது முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என காவல்துறை தெரிவித்துள்ளது.