ஒரு பைசா ஊழல் செய்ததாக நீங்கள் கண்டுபிடித்தால் என்னை பொதுவெளியில் தூக்கில் போடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு மக்களுக்கு தரமான சுகாதாரா சேவைகளை இலவசமாக வழங்கும் விதமாக புதிய 80 ஆம் ஆத்மி கிளினிக்குகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை தாங்கி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்கள், விசாரணை ஆகியவை குறித்து மத்திய பாஜக அரசு மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்துவதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சி மீது புகார் எழுந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். அதேபோல், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிபிஐ சம்மன் செய்து விசாரித்தது. இவை அனைத்தும் மத்திய பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என ஆம் ஆத்மி விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நான் மோடி அவர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் அவர்களே, கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால் இந்த உலகில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை.
கெஜ்ரிவால் ஒரு பைசா ஊழல் செய்ததாக நீங்கள் கண்டுபிடித்தால் அன்றைய தினமே என்னை பொதுவெளியில் தூக்கில் போடுங்கள். ஆம் ஆத்மி தலைவர்களான சத்தியேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது ஊழலுக்காக இல்லை. அவர்களின் சிறந்த செயல்பட்டை தடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். கல்வி மற்றும் சுகாதாரத்தில் ஆம் ஆத்மி சிறந்த திட்டங்களை செய்துள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தான் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.