மணிப்பூரில் வன்முறை – அனைத்து ரயில் சேவைகள் திடீர் நிறுத்தம்!
மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் நடைபெற்ற இந்த பேரணியில், கலவரம் வெடித்தது.
மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. இதையடுத்து கலவரப் பகுதிகளில் இருந்து 9 ஆயிரம் பேரை போலீசார் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். அதேவேளையில், அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் தங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் செல்கிறார். அதற்கு முன்னதாக அங்குள்ள நிலவரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆன்லைன் மூலம் ஆய்வு செய்தார். முதல்வர் பைரன் சிங்குடன் காணொலி மூலம் ஆலோசித்த அவர், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு 10 கம்பெனி படை மூலம் 1000 மத்திய படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்புவதாக அறிவித்தார்.
இந்நிலையில், கலவரத்தின் போது மணிப்பூரில் 23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. டவுங்கல் தெரிவித்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என்றும், ஆயுதங்களை களவாடிய நபர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டி.ஜி.பி. டவுங்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.