தமிழீழ வங்கிகளில் அபகரித்த தமிழரின் தங்க நகைகள் எங்கே?சபையில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வி எழுப்பினார் சிறிதரன் எம்.பி
“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது. அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது?”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதரன் எம்.பி.,
“மத்திய வங்கியின் கீழ் உள்ள நுண் கடன் நிறுவனங்கள் எவையும் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள தொழிற்சாலைகள் இராணுவ மயமாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பார்க்கும் இடமெல்லாம் வங்கி நுண் கடன்களே இருக்கின்றன.
சேவை துறையே இங்கெல்லாம் முதன்மையாக்கப்பட்டு, மக்களின் பணம் தந்திரோபயாகமாக உரிஞ்சிப்படுகின்றது.
இதனால் பொருளாதாரம் மங்கி வருகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகம் இருந்தது. இதில் தமிழ் மக்கள் பலர் தங்க நகைகள், பணங்களை முதலீடுகளை செய்திருந்தார்கள். இந்த நகைகளுக்கு என்ன நடந்துள்ளது. இப்போதும் தமிழ் மக்கள் அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள்.
புலம்பெயர் தமிழர்களின் பணத்தை சூறையாட வேண்டும் என்ற ஒரே நோக்கமே அரசிடம் உள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது.
இன்றும் அந்தத் தங்கங்கள் அனைத்துமே அரசிடம் .உள்ளன. ஏன் இதனை மீண்டும் எமது மக்களுக்குக் கொடுக்க முடியாது.
அந்தத் நகைகளுக்கு என்ன நடந்தது? அரசு அபகரித்ததை மீண்டும் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயங்குவது ஏன்? இதுதான் எமது மக்களின் பிரச்சனையாக உள்ளது” – என்றார்.