3 மாகாணங்களின் ஆளுநர்கள் வீடு செல்வது அரசியல்வாதிகளின் எதிர்ப்பினாலா?
வடக்கு , கிழக்கு மற்றும் சப்ரகமுவ மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதியை நியமிக்கும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும் பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது இதுவும் என ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால் அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகும் வரை ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய அமைப்புகளின் எதிர்ப்பு!
இதேவேளை, பல முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக சிங்கள தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு சிங்களக் கல்லூரியை மீள ஆரம்பிக்கப்பட்டமை தமக்கு எதிரான பலமான குற்றச்சாட்டுக்களில் ஒன்று எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து திருகோணமலை நகருக்கு அருகில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டத்தை நிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.