கிழக்கு எம்.பி.க்களை அழைக்காவிட்டால் ரணிலுடனான பேச்சைப் புறக்கணிக்க முடிவு!
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான 3 நாள் தொடர் பேச்சுக்களுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும். அவ்வாறு அழைக்காவிட்டால் அந்தப் பேச்சை புறக்கணிப்பது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு எடுத்துள்ளது” – என்று அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ். ரில்கோ விடுதியில் நேற்று மாலை நடைபெற்றது. அந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் இதில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.சிறிகாந்தா, சுரேஷ் பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், செயலர் துளசி புளொட்டின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன், ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன் ஆகியோரே இதில் கலந்துகொண்டனர்.
“இந்தக் கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கூட்டத்தில் அது மீண்டும் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுக்கு அழைத்துள்ளார். இதன்போது அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பேசவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்கப்படாவிட்டால் பேச்சுக்களில் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது” – என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.