குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் போது திடீர் மின்வெட்டால் பரபரப்பு!
பல்கலைக்கழக விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது சுமார் 9 நிமிடத்திற்கு மேல் மின்வெட்டி ஏற்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஒடிசாவின் பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் அரங்கில் குடியரசுத் தலைவர் உரையாற்ற தொடங்கினார். விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவவர் முர்மு மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகம் தனது வரலாற்றின் குறுகிய காலத்திலேயே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் தனித்துவ அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்று கூறினார். மேலும், பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார மரபுகளின் அடித்தளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் ‘புனித தோப்பு’ நிறுவியதற்காக குடியரசுத்தலைவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
இதற்கிடையே குடியரசுத் தலைவர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்வெட்டு காரணமாக அரங்கம் இருளில் மூழ்கியது. அதேவேளை குடியரசுத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த மைக் மட்டும் வேலை செய்தது. குடியரசுத் தலைவரும் எந்த சலனமும் இன்றி உரையை தொடர்ந்தார். சரியாக நண்பகல் 11.56 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்ட் நிலையில், 9 நிமிடங்கள் கழித்து 12.05 மணிக்கு தான் மின்சாரம் தொடங்கியது.
நாட்டின் முதல் குடிமகன் பங்கேற்ற நிகழ்வில் இத்தகைய சம்பவம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மன்னிப்பு கோரி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் திரிபாதி கூறுகையில், “இந்த துரதிஷ்டமான சம்பவம் நிகழ்ந்ததற்கு நான் பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன். மின்வெட்டு ஏற்பட்டதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. அத்துடன் மின்சார துறையைச் சேர்ந்த அதிகாரியை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.