2 கோடியை பெற, 2 வருடம் திட்டமிட்டு மனைவியைக் கொன்ற கணவன் கைது
02 வருடங்களாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலை.
இரண்டு கோடி காப்புறுதித் தொகையை பெற 40 வயது மனைவியைக் கொன்ற 25 வயது கணவன்!
காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெறும் நோக்கில் மனைவியை வாகன விபத்தில் கொன்றார் எனும் சந்தேகத்தின் பேரில் பிட்டிகல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உயிரிழந்த பெண்ணின் கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (06) எல்பிட்டிய பதில் நீதவான் துமிந்த லெயில்வல, உத்தரவிட்டுள்ளார்.
காலி, ‘சுரனிமல’ அதுமலே பகுதியைச் சேர்ந்த தினித் சதீர பண்டித (25) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வன்னியாராச்சி வத்தஹேன தியகிதுல்கந்த , பிடிகல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி (வயது 40) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
காரை ஓட்டிச் சென்று மோதிய சந்தேக நபரையும் , இக் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ,குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பிடிகல பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய CP DAD 7270, போல்ரு ரக வண்டி, பெண்ணின் கணவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன ஆதாரமாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டி வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் மரணம் தொடர்பான விபத்து ஏப்ரல் 30, 2023 அன்று மாலை 4.30 மணியளவில் , பிடிகல – மாபலகம வீதியில் மனம்பிட்ட பிரதேசத்தில் உள்ள வீதிக்கு அருகில் நடந்துள்ளது.
இந்த பிரதேசம் மக்கள் நடமாட்டம் குறைந்த பிரதேசம் என பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் நெடுஞ்சாலைக்கு அருகில் கிடப்பதாக பிடிகல பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பின் பிரகாரம், பிடிகல பொலிஸார் குறித்த பெண்ணை அருகிலுள்ள பிடிகல, கல்லிந்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணின் கணவர் என கூறிக்கொண்ட நபரும் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸாருக்கு உதவியுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே பெண் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு உடனடியாக வந்த, குறித்த பெண்ணின் கணவன் என அடையாளப்படுத்திய நபர் குறித்த பெண்ணின் பணப்பையை தேடியமையை அவதானித்த பொலிஸாருக்கு , அவர் மேல் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதாக பிடிகல பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கல்லிட கிராமிய வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கும் , சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதையடுத்து , சந்தேக நபரின் பாதுகாப்பிற்காக வைத்தியசாலையில் வைத்து போலீசாரின் பாதுகாப்பில் அந்த நபரை எடுத்தததாக , பிடிகல பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதன்பின் சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலைச் சம்பவம் தொடர்பான விபரங்கள் தெரியவந்ததாகவும் , இறந்த பெண் கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார் எனவும் , சம்பவ தினத்தன்று சந்தேக நபரே, குறித்த பெண்ணை கரந்தெனிய, குருதுகஹஹதெபாம அதிவேக வீதி தொடங்கும் வாயிலுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை அழைத்து வந்த போது, கைது செய்வதற்காக போலீசாரால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் இருவருக்கும் வாகன விபத்தின் திட்டம் தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறந்த பெண் , இத் திட்டத்தை உணராமலே அங்கு வந்தார் எனவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபர் விபத்திற்குத் திட்டமிடப்பட்ட இடத்தில் பெண்ணை இறக்கிவிட்டு, தான் வாங்கிய ஹெல்மட்டை திருப்பிக் கொடுத்து விட்டு வருவதாக அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார், அப்போது முன்னைய திட்டத்தின்படி வீதிக்கு அருகில் இருந்த பெண் மீது , வந்த வாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளது.
குறித்த பெண்ணை கொலை செய்ய அவரது கணவர் என கூறப்படும் நபர் , சுமார் 02 வருடங்களாக திட்டமிட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன விபத்தை ஏற்படுத்திக் கொல்வது அல்லது கழுத்தில் இருக்கும் நகையை பறிக்க முயலும் போது கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொல்வது அல்லது நீரில் மூழ்கடித்து கழுத்தை நெரித்து கொலை செய்வது போல பல திட்டங்களை சந்தேகநபர் திட்டமிட்டிருந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட பெண் 04 காப்புறுதிகளை பெற்றிருந்தாகவும் , அவர் இறந்ததன் பின்னர் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான காப்புறுதி தொகை , பெண்ணின் கணவனுக்கு கிடைக்குமெனவும் அதனை பெற்றுக் கொள்வதற்காகவே , தனது மனைவியை கொலை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.